கோவை: பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 2,150 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
அவினாசி சாலை சிட்ரா பகுதியில் பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் 38வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் கல்லூரி முதல்வர்
செங்குட்டுவன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் வின்சென்ட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 1,110 மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டம், 1,040 மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டம் என மொத்தம் 2,150 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
மேலும், முதல் மதிப்பெண் பெற்ற 32 மாணவர்களுக்குப் பதக்கங்களும், சான்றிதழ்களையும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் வின்சென்ட் பேசுகையில், “
தேசிய தரவரிசையில் 10ஆவது இடத்தைப் பிடித்து, இந்தியாவின் முதன்மையான தன்னாட்சி நிறுவனங்களில் ஒன்றாக தனது நிலையை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. உண்மையான தலைமை என்பது பட்டங்களால் வரையறுக்கப்படுவதில்லை. மாறாக, முன்முயற்சி, இரக்கம் மற்றும் சமூக விளைவுகளால் வரையறுக்கப்படுகிறது.” என்றார்.
விழாவின் நிறைவில் ஊட்டச்சத்துவியல் துறைத்தலைவர் உத்ரா நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.