கோவை: டவுன்ஹாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் டவுன்ஹால் மற்றும் காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே இன்று காலை, மாநகராட்சி விக்டோரியா மஹால் போக்குவரத்து சிக்னல் அருகே அமைந்துள்ள சிம்கோ என்ற செருப்புக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
சிறிது நேரத்திலேயே தீ மளமளவென கட்டடம் முழுக்கப்பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்த தீ அருகில் உள்ள கட்டடங்களுக்கும் பரவியது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரமாக (மதியம் 1 மணி நிலவரப்படி) தீயை அணைக்க போராடி வருகின்றனர்,
தீ விபத்து காரணமாக டவுன்ஹால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.