கோவை: விஜயதசமியை முன்னிட்டு சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும் பெயரை எழுதி கொண்டனர்.
விஜயதசமி நாளில் பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பர். மேலும் இந்நாளில் ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாக்கிலும் அரிசியிலும் எழுத வைத்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் இன்றைய தினம் வித்யாரம்பம் நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவையில் சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து நம்பூதிரிகள் குழந்தைகளின் நாக்கில் குழந்தைகளின் பெயர்களை எழுதினர். பின்னர் குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தாய்மொழியின் முதல் எழுத்து, குழந்தைகளின் பெயர், பிள்ளையார் சுழி, அம்மா,அப்பா என்று எழுத வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூட்டம் வருகை புரிவதால் அனைவரும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின் பொழுது சில குழந்தைகள் அமைதியாக எழுத்துக்களை எழுதினர். சில குழந்தைகள் பயந்து அழுது அடம் பிடித்தனர்.