கோவை: கோவையில் பருவநிலை மாறி வரும் நிலையில், காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட தொந்தரவுகளால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவையில் கோடை முடிந்ததுமே, பருவமழை தொடங்கியது. இடையே மழை சற்று குறைந்து, குளிரும் காலை நேரத்தில் கடும் பனியும் நிலவியது. தற்போது பகல் நேரத்தில் வெயிலும், இரவில் லேசான குளிரும் நிலவி வருகிறது.
பருவ நிலை இப்படி அடுத்தடுத்து மாறி வருவதால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
ஏற்கனவே இது குறித்து தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இங்கு மர்ம காய்ச்சல் பரவல் இல்லை என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.

இதனிடையே சமீப நாட்களாக காய்ச்சல் பாதிப்புகளால் கோவையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடுமையான காய்ச்சல் பாதிப்புகளுடன் குழந்தைகள் குவிந்து வருகின்றனர். இந்த சூழலில் கோவையில் இந்த வாரம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையமும் அறிவித்துள்ளது.
காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து கோவை மருத்துவர் ப்ரீத்தி நம்மிடம் கூறியதாவது:-

மழையும், வெயிலும் மாறிமாறி இருக்கும் இந்த காலகட்டத்தில், பருவ கால நோய்கள் அதிகம் இருக்கும். குறிப்பாக தற்போது பருவகால காய்ச்சல் பரவல் அதிகமாக உள்ளது.
வரண்ட தொண்டை, சளி, இருமல், உடல் வலி, காய்ச்சல், சோர்வு உள்ளிட்டவை பருவகால காய்ச்சலின் அறிகுறிகள். இதனால் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
தப்பிக்க வழி?
முதலில் நீங்கள் அதிக தண்ணீர் பருக வேண்டும். ஒரு நாளுக்கு 2 முதல் 3 லிட்டர் கொதிக்க வைத்த நீரை பருகுங்கள். இதனால் உடலில் உள்ள டாக்சின்கள் வெளியேறி காய்ச்சல் அறிகுறிகள் குறையும்.

இந்த காலகட்டத்தில ஆரோக்கிய உணவு முக்கியம். விட்டமின் சி, ஜிங்க் மற்றும் புரோட்டின் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். துரித மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சுத்தம் அவசியம்
சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். சளி, இருமல் இருந்தால் கர்ச்சீப் அல்லது டிஸ்யு பயன்படுத்துங்கள். இது நோய் பரவலைத் தடுக்கும்.
கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கலாம். கட்டாயமாக செல்ல வேண்டும் என்றால் மாஸ்க் பயன்படுத்தலாம். இது நீங்கள் பாதிக்கபடும் வாய்ப்பைக் குறைக்கும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கண்டிப்பாக 7 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் ப்ரீத்தி கூறினார்.