கோவை: பாஜகவும் ஆர்எஸ்எஸும் தான் விஜய்யை அரசியலில் இறக்கி சிக்க வைத்துள்ளதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.
கோவை சிந்தாமணி பகுதியில் ஆதித்தமிழர் பேரவை மேற்கு மண்டல மாநில நிர்வாகிகள் மாவட்டம் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதியமான், 18% உள் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வகைப்படுத்திட வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதனை விரைந்து வகைப்படுத்திட வலியுறுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி தமிழக முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை குறிப்பிட்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே எடுக்கலாம், மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு அடுத்த வருடம் எடுப்பதாக அறிவித்துள்ளார்கள் எனவே தமிழக அரசு அதுவரை காத்திருக்காமல் சாதி வாரி கணக்கெடுப்பை விரைந்து எடுத்து வகைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
76 சாதிகளையும் கணக்கெடுத்து அதில் பின்தங்கிய நிலைகளை கண்டறிந்து அவர்களுக்கும் உள்ள இட ஒதுக்கீடை வழங்க வேண்டும் என கூறினார். அவ்வாறு செய்தால் தான் சமூக நீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டம் விவகாரம் குறித்து பேசிய அவர், அந்த துயர சம்பவம் மிகப் பெரிய கண்டனத்திற்கு உரியது அதனை நடத்தியவர்களும் கண்டனத்திற்குரியவர்கள் என தெரிவித்தார். அதனை நடத்தியவர்கள் எல்லாம் ஓடி ஒளிந்து விட்டார்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்லவில்லை ஆனால் தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வரின் பணி பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் முதல்வர் அறிவித்ததை அடுத்து 20 லட்சம் ரூபாய் அந்த கட்சியினர் அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது தமிழக அரசு அளித்துள்ள சிகிச்சைக்கான செலவு என அனைத்தையும் விஜய்யிடம் இருந்து பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாயை விஜய் வழங்க வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வீடு கட்டித் தர வேண்டும் என தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இதில் முதல் குற்றவாளியாக விஜயை சேர்த்து அவரை கைது செய்வதற்கு இந்த அரசு தயங்க கூடாது என கேட்டுக் கொண்டார். அந்த பிரச்சார வாகனத்தை ஒட்டிய டிரைவர் உட்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால் விஜய் மீது இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை விஜய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளது அதனை உடனடியாக அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சமூக வலைதளங்களில் உயர் நீதிமன்ற நீதிபதியையே பலரும் விமர்சிப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த விதமான பயிற்சியோ அனுபவமோ எதுவும் இல்லாமல் கட்சியை துவங்கியவுடன் முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று நினைப்பதாக சுட்டி காட்டினார். மேலும் விஜய் தானாக அரசியலுக்கு வந்தது போன்று அவரது நடவடிக்கைகளில் வெளிப்படுத்தவில்லை விஜய்யை பாஜகவும் ஆர்எஸ்எஸும் திமுகவிற்கு எதிராக தமிழ்நாட்டு அரசியலில் வாக்குகளை பிரிப்பதற்காக இறக்கிவிட்டு சிக்க வைத்திருப்பதாக விமர்சித்தார்.
பாஜகவின் பிடியில் வசமாக விஜய் மாட்டியுள்ளார் அவர்கள் காட்டக்கூடிய வழிகளின்படி விஜய் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நேரடியாக வராத விஜய் நான் அலுவலகத்தில் தான் இருப்பேன் என்னை வந்து கைது செய்யுங்கள் என்று ஆணவத்துடன் பேசுவதாக தெரிவித்தார்.
சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழித்து மயக்கத்தில் இருந்து எழுந்து வந்து எழுதிக் கொடுத்ததை விஜய் படித்துள்ளார் அந்த துயர சம்பவம் நடந்த பிறகு அந்த கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறந்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
படப்பிடிப்பு கேரவனை முதன் முதலில் அரசியலுக்குள் கொண்டு வந்தது விஜய் தான் என்றும் விமர்சித்தார். விஜய் முதல்வரை விமர்சிப்பதும் நீதிமன்றத்தை விமர்சிப்பதும் சிறிது நாட்கள் தான் நடக்கும் ஒரு வாரத்திற்குள் அனைத்தும் தலைகீழாக மாறும் என்று கருதுவதாக தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு வகைப்படுத்துதல் தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் க்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், மீண்டும் அது பற்றி வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.