கோவை: கோவையில் கல்லூரி களப்பயணம் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் கல்லூரியில் சேரும்பொழுது கல்லூரி படிப்பு குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரி களப்பயணம் என்பது துவங்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவ மாணவிகளை அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆகிய கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று கல்லூரி படிப்பு குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று கல்லூரி களப்பயணம் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதனை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இன்றைய தினம் 12ம் வகுப்பு பள்ளி மாணவிகள் கோவை அரசு கலைக் கல்லூரிக்கும் பீளமேடு பகுதியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரிக்கும் களப்பயணம் மேற்கொள்கின்றனர். முதல் நாளான இன்று இரண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கல்லூரி களப்பயணம் மேற்கொள்கின்றனர்.
முன்னதாக மாணவிகளிடம் உரையாடிய மாவட்ட ஆட்சியர் கல்லூரிகளுக்கு சென்று அங்கு என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது, எந்த பாடத்திட்டம் உங்களுக்கு சரியானதாக இருக்கும் என்று கேட்டறிந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
இனி தொடர்ந்து கோவை மாவட்டத்தில் இந்த கல்லூரி களப்பயணம் நிகழ்வானது நடைபெறும் என்றும் பள்ளி மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் அரசு கல்லூரிகளுக்கும் தேவைப்பட்டால் தனியார் கல்லூரிகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.