கோவை: உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்த முயன்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரணை நடத்தி வந்த நிலையில் அங்கிருந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் திடீரென அவரது காலணியை கழற்றி தலைமை நீதிபதி நோக்கி வீச முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்பொழுது அவரை மடக்கி பிடித்து வெளியேற்ற முற்பட்டபோது சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று முழக்கமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை அப்புறப்படுத்திய நீதிமன்ற காவலர்கள் டெல்லி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ராகேஷ் கிஷோர் நடவடிக்கைக்கு பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வழக்கறிஞர்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 30 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சனாதன தர்மம் என்ற பெயரில் இது போன்ற செயலை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
அந்த வழக்கறிஞர் மதவெறி ஜாதி வெறி தலைக்கேறுகிற நிலையில் இது போன்று செய்துள்ளதாகவும் இதே ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி என தெரிவித்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.