கோவை: வரையாடுகள் தினத்தை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீலகிரி வரையாடுகள் ஆய்வுகளின் முன்னோடியாக திகழும் டேவிட்டரின் பிறந்த நாளான அக்டோபர் 7ம் தேதி நீலகிரி வரையாடுகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நீலகிரி வரையாடுகளை பற்றியும் அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்துமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்படுகிறது.

அதன்படி இன்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலைக் கல்லூரியில் இருந்து துவங்கிய இந்த பேரணியானது பந்தயசாலை பகுதியை சுற்றி மீண்டும் கலைக் கல்லூரியில் வந்தடைந்தது. இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் அரசு கலைக் கல்லூரியில் கையெழுத்து இயக்கம், பள்ளி, கல்லூரி மாணவர்களின் புகைப்பட மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.