கோவை: கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி போட்ட 49 நாட்கள் ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலாண்டிபாளையம் அருகே உள்ள மருது கோனார் தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன்( வயது 28 ). இவருக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இவருக்குக் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் 45 நாள் கழித்து தடுப்பூசி போட வேண்டும் என்பதால், கே.கே.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தடுப்பூசி போட்ட சில நாட்களில் குழந்தை உடல்நிலை பாதித்து இறந்துவிட்டது. இது குறித்து புவனேஸ்வரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது மனைவிக்கு பிரசவம் ஆனதாகவும் கடந்த 19ஆம் தேதி 45வது நாள் தடுப்பூசி போடுவதற்காக குழந்தையை அங்கு எடுத்துச் சென்றதாகவும் கூறியிருந்தார்.
உயிரிழப்பு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போட்ட நிலையில் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது ஊசி போட்ட இடத்தில் ரத்தம் வந்தது என்றும், குழந்தையின் கண்கள் மேலும், வேகமாகச் சுழன்றதால் பயந்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகக் கூறியிருந்தார்
அங்குள்ள மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதால் கோவை அரசு மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்றதாகவும் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை போத்தனூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் கணவர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் கோவை மக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.