கோவை: உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜ் (59). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பாலக்காட்டிற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் மங்களூருக்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். நேற்று ஸ்ரீராஜ் வீட்டில் பணிபுரிந்து வரும் கவிதா என்ற பெண் ஸ்ரீராஜூக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராஜ் உடனே அங்கிருந்து கோவை திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க காசுகள், தங்க மூக்குத்தி, மோதிரம், கம்மல், மற்றும் சில்வர் பொருட்கள், வெளிநாட்டு வாட்ச் மற்றும் ரூ.1,000 ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீராஜ் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

