கோவை: நொய்யல் ஆற்றை பாதுகாக்க மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்…
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு கோவை திருப்பூர் மாவட்டங்களை கடந்து கரூர் வரை செல்கிறது. மேலும் கோவையின் முக்கிய ஆறாகவும் நொய்யல் ஆறு இருந்து வருகிறது.
Advertisement

அதே சமயம் இந்த ஆறு கடந்து செல்லும் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஆற்றில் கலந்து நீரில் இரசாயன நுரைகள் பொங்கி வெளியேறும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்நிலையில் நொய்யல் ஆறு செல்லும் ஆத்துப்பாலம் பகுதியை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் ரசாயன கழிவுகள் கலந்து வரும் பொழுதெல்லாம் என்னென்ன சிரமங்கள் ஏற்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவரிடம் பேசிய அப்பகுதி மக்கள் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தனர். அதே சமயம் ஒவ்வொரு கட்சியினரும் அரசு அதிகாரிகளும் பார்த்து விட்டு தான் செல்வதாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பி ஆர் பாண்டியன், நொய்யல் ஆறை கொண்டுதான் கோவை நகரத்தின் அழகே இருக்கிறது. தற்பொழுது அந்த ஆறு கழிவு நீர் கால்வாயாக மாறி இருக்கிறது என்றார். 300 அடி அகலம் கொண்டிருந்த நொய்யல் ஆறு தற்பொழுது 50 அடி அகலம் கொண்ட கழிவு நீர் கால்வாயாக மாறியிருப்பதாகவும் இதனால் கோவைக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கான சிறப்பு பெருந்திட்டத்தை தொழிலதிபர்கள் பங்களிப்புடன் அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Advertisement

நொய்யல் ஆறு துவங்கும் இடத்தில்தான் ஈஷா யோகா மையம் இருக்கிறது என சுட்டிக்காட்டிய அவர் ஈஷா நிறுவனரிடமும் காவிரி ஆற்றை பாதுகாப்பது போலவே நொய்யல் ஆற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்ததாக கூறினார்.
அரசு பெருநிறுவனங்களுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க, இது சம்பந்தமாக விரைவில் தீவிரமான போராட்டத்தை கோவை மக்கள் பங்கேற்போடு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும் நாளை தமிழக விவசாயிகள் மகாசபை கூட்டம் பேரூரில் நடைபெற இருப்பதாகவும் அதிலும் இது சம்பந்தமாக போராட்டம் நடத்துவதற்கான முடிவுகளையும் எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.