கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறையை சுத்தம் செய்வதற்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கினர்.
ஆடிப்பெருக்கு நன்னாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நீர் நிலைகளில் பொதுமக்கள் திரண்டு கனிகள் பலகாரங்கள் உணவுகள் படையல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். நீர்நிலைகள் உள்ள பகுதிகளில் ஒன்று கூடும் மக்கள் நீர் நிலைகள் செழிப்புடன் இருக்க வேண்டும் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பலரும் வேண்டுதல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் பேரூர் படித்துறையில் அதிகாலை முதலே மக்கள் திரளாக வருகை புரிந்து படித்துறையில் கனிகள் உணவுகள் பலகாரங்கள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிக அளவு உணவுப் பொருட்கள் அங்கு வீணாகக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் எடுத்து வரக்கூடிய ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களை அங்கேயே விட்டு செல்வதாலும் குளக்கரைகள் மாசடைகிறது.

இந்நிலையில் இன்று அதிக அளவிலான மக்கள் அங்கு வருகை புரிந்து படையல் படைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான உணவுகளும் பிளாஸ்டிக் பொருட்களும் சேரும் என்பதால் அதனை அகற்றுவதற்கு பேரூர் பேரூராட்சி நிர்வாகம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு தன்னார்வலர்களும் களமிறங்கியுள்ளனர்.
பொதுமக்கள் அங்கு விட்டுச் செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் குப்பைகளை அவர்கள் அகற்றி அவற்றை அங்கேயே வகை வகையாக பிரித்து எடுத்து செல்கின்றனர்.




