கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம்- துணை முதல்வர் திறந்து வைத்தார்

கோவை: கோவையில் புதிய ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவை ஆர் எஸ் புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைச்சக்கரம் பொருத்திய வாகனங்களை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகள் சார்பில் 152.95 மதிப்பில் முடிவுற்ற 106 பணிகளை துவக்கி வைத்து 31.72 கோடி மதிப்பில் 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து 10,626 பயனாளிகளிக்கு 136.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். முதல்வருக்கு கோவை மீது தனி பாசம் உள்ளது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சிறப்பாக திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

2021ல் முதல்வர் ஆன பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து விடியல் பயணம் தான் என்றும் அதன் மூலம் இன்று வரை மகளிர் தொள்ளாயிரம் கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்று மாததோறும் இதன் மூலம் 1000 ரூபாய் சேமிப்பதாக தெரிவித்தார். மேலும் அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்துள்ளதையும் குறிப்பிட்டார்.

மேலும் புதுமைப் பெண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் இது தவிர கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்த வருடம் மட்டும் 10 லட்சம் நவீன லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவைக்கு புத்தாண்டு பரிசாக நான் 10 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்துள்ளதாக தெரிவித்தார். இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இங்கும் நடைபெறும் என கூறினார்.

SIHS காலனியில் உயர் மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2010 ஆம் ஆண்டு கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால் அதிமுக ஆட்சியில் அதனை கிடப்பில் போட்டு விட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதே போன்ற மகளிர் சுய உதவி குழு மாற்றுத் திறனாளிகள் என அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை அரசு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp