கோவை: ஜாதியைக் காரணம் காட்டி கெம்பனூரில் இருந்து அண்ணா நகர் வரை பேருந்து இயக்கப்படவில்லை என்றும், இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன், கோவை மண்டல போக்குவரத்து பொது மேலாளருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் கெம்பனூர் கிராமத்தில் கடைசி பேருந்து நிறுத்தமாக அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இதற்கு முந்தைய பேருந்து நிறுத்தமான கெம்பனூர் பேருந்து நிறுத்தத்திற்கும், அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்திற்கும் சுமார் அரைக்கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது.
இந்த நிலையில், கெம்பனூர் செல்லும் 21 எண் கொண்ட பேருந்து அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதில்லை. அண்ணா நகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
அவர்களே அந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்துகின்றனர். வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பெண்களும், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அண்ணா நகரில் இருந்து நடந்து சென்றும், சில நேரங்களில் ஓடிச் சென்றும் கெம்பனூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏற வேண்டிய சூழல் உள்ளது.

பேருந்து அண்ணா நகரில் இருந்து புறப்பட்டால், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் பேருந்து இருக்கைகளில் அமர்ந்து கொள்ளவார்கள் என்றும், இதனால் பேருந்து அங்கு செல்லக்கூடாது என்றும் சில ஜாதியவாதிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே அந்த பேருந்து கெம்பனூருடன் திரும்புகிறது என்பதைக் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கள ஆய்வு மூலம் தெரிந்து கொண்டோம்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
எனவே கெம்பனூருக்கு செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் அந்த ஊரின் கடைசி பேருந்து நிறுத்தமான அண்ணா நகர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்று திரும்ப வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த தீண்டாமை நிலை தொடர்ந்தால் மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.