கோவை: மதுக்கரை அருகே காரில் ஏற்பட்ட தீ விபத்தில் வாலிபர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் கோவை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விமல் (22) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ நேரத்தில் காரில் மூன்று பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட போது கார் தீப்பிடித்த நிலையில், அதில் விமல் மட்டும் சிக்கி வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். மற்ற இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.
அப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் சாலையோரத்தில் பைப் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
அந்த பைப்பில் கார் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

