கோவை: மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னை – கோவை விமான கட்டணம் ரூ.16,500 ஆக உயர்ந்துள்ளது.
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை இருப்பதால், சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர், இந்த தொடர் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கினர்.
இதேபோல் அதிக அளவில் பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததால், சென்னையில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் நேற்று பல மடங்கு உயர்ந்துள்ளன.
இந்நிலையில், சென்னை – கோவை இடையே ரூ.4,966 ஆக இருந்த கட்டணம் ரூ.16,496 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே விமான எரிபொருள் விலை அதிகரித்திருப்பதால், விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருந்தன. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான கட்டணங்கள் சர்வதேச விமான கட்டணங்களின் அளவுக்கு உயர்ந்துவிட்டதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

