கோவையில் வீட்டு மனை மோசடி வழக்கு: கட்டுமான நிறுவனம் மீது நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

கோவை : கோவை சூலூர் பட்டணத்தில் ஒப்பந்த விதிகளை மீறி 12 காலி மனைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனமும் அதன் இயக்குனரும் ரூ.7.75 கோடி நஷ்டஈடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த தனி நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த நடராஜன் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்திற்குச் சொந்தமாக, சூலூர் பட்டணத்தில் 2.04 ஏக்கர் பரப்பளவில் டி.டி.சி.பி. அனுமதி பெற்ற 31 வீட்டு மனைகள் உள்ளன. இந்த இடத்தில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்வதற்காக, கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் வில்சன் பி. தாமஸுடன் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இந்த ஒப்பந்தத்தின்படி, நிலத்தின் மொத்த மனைகளில் 15 மனைகளில் 22,500 சதுர அடி பரப்பளவில் வீடுகளைக் கட்டி நடராஜன் நிறுவனத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 16 மனைகளில் வீடுகளைக் கட்டி விற்பனை செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எந்தவொரு மனையையும் வீடு கட்டாமல் காலி மனையாக விற்பனை செய்யக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதற்காக கட்டுமான நிறுவனத்திற்கு பொது அதிகாரப் பத்திரமும் வழங்கப்பட்டது.

ஆனால், ஒப்பந்தப்படி 24 மாதங்களுக்குள் வீடுகளைக் கட்டி ஒப்படைக்காமல் கட்டுமான நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் ஒப்பந்த விதிகளை மீறி 12 காலி மனைகளை வில்சன் பி. தாமஸ் தனது மனைவி ரீனி, நிறுவனத்தின் சக இயக்குனர் சிஜோ மற்றும் மேலாளர் பார்த்திபன் ஆகியோருக்கு குறைந்த விலைக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

Advertisement

மேலும், இந்தப் பத்திரப்பதிவுக்காக நடராஜன் பெயரில் போலியான ‘லைப் சர்டிபிகேட்’ தயாரித்து பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த மனைகள் மற்ற நபர்களுக்கு மறுவிற்பனை செய்யப்பட்டதுடன், அடமானமும் வைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நடராஜன் கடந்த 2024-ம் ஆண்டு கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், கட்டுமான நிறுவன இயக்குனர் வில்சன் பி. தாமஸ், அவரது மனைவி ரீனி, சக இயக்குனர் சிஜோ மற்றும் மேலாளர் பார்த்திபன் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில், வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தனி நடுவராக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், சம்பந்தப்பட்ட சொத்தை ஒரு மாதத்திற்குள் நடராஜன் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், ஒப்பந்தப்படி வீடுகளைக் கட்டி ஒப்படைக்காமல் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதற்காக, கட்டுமான நிறுவனமும் அதன் இயக்குனர் வில்சன் பி. தாமஸும் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ரூ.6.75 கோடியை 18 சதவீத வட்டியுடன் நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதுதவிர, மோசடியால் நடராஜன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்காக மேலும் ரூ.1 கோடியை 18 சதவீத வட்டியுடன் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி, மொத்தம் ரூ.7.75 கோடி நஷ்டஈடு வழங்கவும், சம்பந்தப்பட்ட சொத்தை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் நிறுவனங்களில் ஆயுதபூஜை வழிபாடு…

கோவை: தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, பல்வேறு தொழில் நிறுவனங்களில் இயந்திரங்களைச் சுத்தம் செய்து, மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள்...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...