கோவை: பெரியார் அறிவுலகத்தைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நூலகங்களில் இருந்து போலி புத்தகங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் பீனிக்ஸ் மற்றும் அகல் விளக்கு என்ற பதிப்பகங்களின் போலி புத்தகங்கள் இடம் பெற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு, இயல்பு விலையை விட அதிக விலைக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாபெரும் ஊழல் நடந்திருப்பதும் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நூலகங்களில் ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்ட அடிப்படையில், மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 70,674 புத்தகங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
கோவையில் போலி புத்தகங்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள 195 முழுநேர நூலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 3,808 போலி புத்தகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
பெரியார் அறிவுலகத்தில் எழுந்த ஊழல் சர்ச்சையைத் தொடர்ந்து, நூலகங்களில் உள்ள புத்தகங்களின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட நூலக அலுவலர் நந்தகுமார் தலைமையில் இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஆய்வில், அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களைச் சேர்ந்த 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. வாசகர்களுக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலேயே போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





