கோவை: கோவை அவினாசி சாலை புதிய மேம்பாலத்தில் கான்கிரீட் கற்கள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.
தொழில், கல்வி, மருத்துவத்துறை மற்றும் ஐடி துறைகளில் அசுர வளர்ச்சி கண்டு வரும் கோவையில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு தொழில்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், தற்போதைய மக்கள்தொகை மிக விரைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதனைக்கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகவும் அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் தொடங்கி கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் ரூ.1,800 கோடி மதிப்பில் அவினாசி சாலை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பயனுள்ள பாலம்
தமிழ்நாட்டிலேயே மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் இந்த புதிய மேம்பாலம் பெற்றுள்ளது.
இந்தப் பாலம் அமைப்பதற்காக 300 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட இடங்களில் நாம் பாலத்தில் ஏறியும், குறிப்பிட்ட இடங்களில் நாம் பாலத்திலிருந்து கீழே இறங்கியும் பயணிக்கலாம்.
காந்திபுரம் நஞ்சப்பா சாலை மேம்பாலத்தைப் போல அல்லாமல், இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய மேம்பாலமாக அமையப்போகிறது.
இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கான்கிரீட் கல் ஒன்று கார் மீது விழுந்தது. இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் கான்கிரீட் கல் கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது விழுந்தது. இதில் வாகனங்கள் சேதமாகின.
இந்த இரண்டு சம்பவங்களிலும் நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பத்திரம் மக்களே…

இதனிடையே, நேற்று அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டி மீது பாலத்தின் இணைப்புகளில் தேங்கியிருந்த கான்கிரீட் கற்கள் விழுந்துள்ளன.
அவரது வாகனத்தின் மீது அந்த கற்கள் விழுந்ததால் வாகன ஓட்டி உயிர் பிழைத்துள்ளார். அவினாசி சாலை புதிய மேம்பாலம் அக்டோபர் 9ஆம் தேதி திறக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், மேம்பாலத்தில் முறையாகக் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் அவ்வப்போது இது போன்ற விபத்துக்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
மிக விரைவில் முதலமைச்சர் திறக்க உள்ள பாலத்தில் இருந்து கான்கிரீட் கற்கள் விழும் சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதிகாரிகள் உரிய முறையில் பாலத்தை ஆய்வு செய்து, மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.