கோவை: இலவசங்களின் பயன் கீழ்த்தட்டு மக்களுக்கு தான் தெரியும் என்றும், இலவசங்கள் வேண்டாம் என்பது அரசியலுக்காக என்றும் காங்கிரஸ் கட்சியின் கண்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் மக்களிடம் கேட்டுப் பெற்ற கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பலமுறை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த முறை தனித்துவமாக கார்த்திக் சிதம்பரம் இந்த குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ எந்தெந்த தேவைகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் கூட்டணி தலைவரிடம் வலியுறுத்தி நிறைவேற்ற பாடுபடுவோம்.
Click here to read news கோவையில் குப்பை வண்டி வரும்போது விசில் ஊத எதிர்ப்பு!
தற்பொழுது உள்ள பல்வேறு இலவசத் திட்டங்கள் பொதுமக்களுக்கும், குறிப்பாக மகளிர்க்கும் உதவிகரமாக இருக்கிறது. இனியும் பல்வேறு மகளிர் சார்ந்த விஷயங்கள் குறித்தான கோரிக்கைகள் ஆதிதிராவிடர் மக்களின் பட்டாக்கள் குறித்தான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
அரசுக்கு எதிரான சில செய்திகள் வரும்பொழுது தேவையான இடத்தில் திமுகவிற்கு எதிராக குரல் கொடுக்கிறோம். திமுகவினர் பேசுகிறார்கள் என்பதற்காக நாங்கள் பேசாமல் இருப்பதில்லை. நாங்கள் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கூறி வருகிறோம்.
மத்திய அரசின் துணை என்பது நம்முடைய மாநில அரசுக்கு கிடைப்பதில்லை. வருகின்ற காலத்தில் பாராளுமன்றத்தில் அதனை வலியுறுத்தி நம்முடைய மாநிலத்திற்கு அதனை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்.
வருகின்ற 30ம் தேதிக்குள் அனைத்து கருத்துகளையும் ஒன்றிணைத்து அதில் முக்கியமான கோரிக்கைகளை அச்சடித்து வீடு வீடாக கொடுக்க உள்ளொம். மேலும் பல்வேறு கோரிக்கைகளை கார்த்திக் சிதம்பரம் தலைமையில் வலியுறுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தற்பொழுது பல்வேறு இளைஞர்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, “இலவசங்கள் என்பது ஒரு சில மேல் தட்டுக்காரர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் கீழ்த்தட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அந்தத் திட்டங்கள் சென்றடையும் பொழுது அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த இலவசங்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமைகிறது என்று கீழ்தட்டு மக்களுக்கு தான் தெரியும். இலவசங்கள் வேண்டாம் என்று கூறுவதெல்லாம் அரசியலுக்காக சொல்லப்படக்கூடிய கருத்து.” என்றார்.
Click here to read news அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை மாத்திரைகள்!

