கோவை: கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன், மேயருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே, 44-வது வார்டு கவுன்சிலரும், மகிளா காங்கிரஸ் செயல் தலைவருமான காயத்ரி, மாமன்றக் கூட்ட அரங்கின் வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, மேயர் தனக்கும், தனக்கு எதிரானவர்களுக்கும் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், மாமன்றத்தில் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், ஊழலுக்கு எதிராகப் பேசியதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தனது அலைபேசி அழைப்புகளைக்கூட மேயர் ஏற்பதில்லை எனக் குற்றம்சாட்டிய காயத்ரி, இதுகுறித்து மேயரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். அப்போது, மாமன்ற வளாகத்திற்குள் வந்த மேயர் ரங்கநாயகியிடம், “ஏன் எனது அலைபேசி அழைப்புகளை எடுப்பதில்லை?” எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு மேயர், தனது அலுவலகத்திற்கு வந்து பேசுமாறு கூறிவிட்டு உள்ளே சென்றார்.
இதனால் அதிருப்தியடைந்த காயத்ரி, தனது கேள்விக்கு முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறி மேயருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து, “இப்படிப்பட்ட மேயர்தான் நமக்கு இருக்கிறார்” எனக் கூறி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே பெண் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டதும், மேயருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தின்போது திமுக கவுன்சிலர்களுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தைத் தொடர்ந்து, காயத்ரி இரண்டு மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






