கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்தில் சிம்னி விளக்குகளுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் சிம்னி விளக்குகளைக் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீர்மானங்கள் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை எனக் குற்றம்சாட்டிய அதிமுக கவுன்சிலர்கள், சிம்னி விளக்குகளைக் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கூட்ட அரங்கிற்குள்ளும் சிம்னி விளக்குகளுடன் சென்ற அவர்கள், தெரு விளக்குகள் தொடர்பாகக் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது பேசிய திமுக கவுன்சிலர் மாலதி, “சட்டமன்றமே இருளில் மூழ்கியிருந்தது” என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மற்றொரு திமுக கவுன்சிலர், “தமிழ்நாடே இருட்டில்தான் உள்ளது” என்று தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே, கூட்டத்தில் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்ட தீர்மானப் பொருள்கள் தொடர்பாகவும் அதிருப்தி எழுந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு 36 தீர்மானப் பொருள்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று 50-க்கும் மேற்பட்ட பொருள்கள் கூடுதல் விவாதத்திற்காக மேசைக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, தீர்மானப் பொருள்கள் அடங்கிய தொகுப்பைத் தூக்கி எறிந்தார். தொடர்ந்து, சில கவுன்சிலர்கள் மேயரின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் தொடர்ந்து அமளி நிலவியதால், மாநகராட்சி மன்றக் கூட்டம் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.






