கோவை: மாவட்ட அளவிலான இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்தும் வகையிலும் அரசு சார்பில் “இது நம்ம ஆட்டம்-2026” என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய அளவிலான இந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 25 ஆம் தேதி நடத்தப்பட்டதை தொடர்ந்து இன்றும் நாளையும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி கோவையில் ஊராட்சி ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் இன்று நேரு விளையாட்டு அரங்கிலும் நாளை கற்பகம் பல்கலைக்கழக மைதானத்திலும் நடைபெறுகிறது.

நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டியினை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்து போட்டியாளர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
அதே சமயம் இன்று மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டிகளும், ஆண் பெண் இரு பிரிவினர்களுக்குமான போட்டிகளும் நடைபெறுகிறது.
முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு விளையாட்டுப் போட்டியில் குழுவாக பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு ஒற்றுமையுடன் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் நேரு விளையாட்டு அரங்கு சீரமைப்பு பணிகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அதுமட்டுமின்றி முதலிடம் பிடிப்பவர்களுக்கு 6000 ரூபாய் இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு 4000 ரூபாய் மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

