கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே விவசாயப் போர்வெல்லுக்கு மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், மின்வாரிய வணிக ஆய்வாளர் மற்றும் கள உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவர், தனது விவசாயப் பயன்பாட்டிற்காக அமைத்த போர்வெல்லுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் தாமரைக்குளம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு முன் இணைப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, மின்வாரிய வணிக ஆய்வாளர் வேல்முருகன், சுரேஷ்குமாரிடம் ரூ.6,000 லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, மின்வாரிய கள உதவியாளர் நவீன்குமார், சுரேஷ்குமாரிடம் மேலும் ரூ.1,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் அதிருப்தியடைந்த சுரேஷ்குமார், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர், இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார், மின்வாரிய அலுவலகம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூ.1,000-ஐ நவீன்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைப் பெற்றபோது, அங்கு வந்த போலீசார் நவீன்குமாரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, வணிக ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் கள உதவியாளர் நவீன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவில் போர்வெல் மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்றதாக மின்வாரிய அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.






