கோவை: கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் 61 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட தகுதியானவர்கள் அக்டோபர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் (Home Guard) காலியாக உள்ள 61 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 59 இடங்களும், பெண்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியுடையவர்கள் அக்டோபர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்களைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகங்களில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் 01.10.2026 நிலவரப்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 50 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமின்றி, தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நல்ல உடல் தகுதியும் நன்னடத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ் நகல் (மதிப்பெண் பட்டியல் அல்லது மாற்றுச் சான்றிதழ்), ஆதார் அட்டை நகல், இருப்பிடச் சான்று மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அக்டோபர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






