கோவை: கோவையில் தேர்தலையொட்டி விடுப்பில் உள்ள போலீசார் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட 333 பகுதிகளில் 1,775 வாக்குச்சாவடிகள் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் 46 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என்றும், 6க்கும் மேற்பட்ட வாக்கு மையம் கொண்ட 78 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல கோவை மாவட்ட போலீஸ் எல்லையில் 2046 வாக்குச்சாவடிகளில் 107 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தலின் போது பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் சாதாரண வாக்குச்சாவடிகள் வகைப்படுத்தப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சாதாரண வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
இதுதவிர பறக்கும் படையினருடன் இணைந்து போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் வாகனச்சோதனை செய்வது, கோவை-கேரள எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதும், அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, பொதுக்கூட்டங்களை கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Read news: கோவை திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் இல்லை- கே.ஆர்.ஜெயராம் பிரச்சாரம்…
இந்த நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் கோவை மாநகர பகுதிகளில் 4 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 4000 போலீசார் என மொத்தம் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதற்காக விடுமுறையில் உள்ள போலீசார் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில் உடல் நிலை, மகப்பேறு காரணமாக விடுமுறையில் உள்ள போலீசாருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 4 ஆயிரம் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
மீதம் உள்ள 4000 போலீசார் அண்டை மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவின் போது பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட உள்ளனர். மேலும், 6 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு ஓரிரு நாட்களில் வர உள்ளனர்.

