கோவை : கோவை, பீளமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே. நாயுடு பள்ளி மாணவர் அகிலன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கோவை மாநகர காவல் துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, உயிரிழந்த மாணவரின் தாயார் கௌசல்யா தேவி அளித்த புகாரின் பேரில், அன்றைய தினமே இ2 பீளமேடு காவல் நிலையத்தில் குற்ற எண் 446/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், பாரதிய நியாயச் சட்டம் (BNS) பிரிவுகள் 115(2), 108 மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ன் பிரிவு 3(2)(v) ஆகியவற்றின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவருடன் பயிலும் சக மாணவர்கள் இருவர், அவரைச் சாதிய ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரியவந்துள்ளதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரண்டு இளஞ்சிறார்களும் கைது செய்யப்பட்டு, இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில், துணை ஆணையர் தங்கதுரை தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை விரைவாக நடைபெற்று வருவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
மாணவரின் தாயார் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை பெறுவது மற்றும் அசைவ உணவான மாட்டிறைச்சி உட்கொள்வது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற சாட்சிகள் என 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஆகியோரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு, அதுதொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், மாணவரின் உயிரிழப்புக்கான முழுமையான காரணங்கள் மற்றும் வழக்கில் கூடுதல் தடயங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுவதாகக் காவல் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள கோவை மாநகர காவல் துறை, விசாரணை முறையாகவும் நியாயமாகவும் நடைபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.






