கோவை: கோவையில் மிக கனமழை பெய்து வருவதால், நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர கால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும் வரை கோவையிலிருந்து நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மலைப்பாதைகளில் செல்ல வேண்டாம்!
பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் பொதுமக்கள் மலைப்பாதைகளைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பயணிகளும் மலைப்பாதைப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்.
மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மரங்கள் விழுதல், பாறைகள் சரிந்து விழுதல், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தடை அறிவுறுத்தல்
கனமழை காலத்தில் நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஓடைகள், அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆறுகளில் இறங்குவது, குளிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
வெள்ளம் சூழ்ந்த சாலைகள், பெருக்கெடுத்து ஓடும் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, பொது இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதையும் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மழை பெய்யும் நேரங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளைத் தொடக்கூடாது. வாகனங்களை மரங்களின் அடியில் நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மழை தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப பயணங்களைத் திட்டமிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 6 மணி முதல் காலை 7 மணி வரை வாகனப் போக்குவரத்துக்குத் தடை
நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் நிலவும் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (TNSTC) உட்பட அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். அத்தியாவசிய மற்றும் அவசரகால வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனிக்க வேண்டும்.
அவசர உதவிக்கு 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம்
மழை மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் கோயம்புத்தூர் மாவட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். இந்தக் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட அவசரகால உதவி எண்கள்:
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077
தொலைபேசி எண்: 0422-2306051
கோவை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தொடர்பு எண்கள்
கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகம்: 0422-2302323
கோவை மாநகராட்சி வாட்ஸ்அப் எண்: 81900-00200
வடக்கு மண்டலம்: 89259-75980
தெற்கு மண்டலம்: 90430-66114
மத்திய மண்டலம்: 89259-75982
மேற்கு மண்டலம்: 89259-75981
கிழக்கு மண்டலம்: 89258-40945
நகராட்சி அலுவலகத் தொடர்பு எண்கள்
வால்பாறை: 04253-222122
பொள்ளாச்சி: 04259-220999
மேட்டுப்பாளையம்: 04254-222151
மதுக்கரை: 0422-2511815
கூடலூர்: 0422-2692402
கருமத்தம்பட்டி: 0421-2333070
காரமடை: 04254-272315
வருவாய்த் துறை அலுவலகத் தொடர்பு எண்கள்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம்: 04259-224855
கோவை வடக்கு வருவாய்க் கோட்டம்: 0422-2444450
கோவை தெற்கு வருவாய்க் கோட்டம்: 0422-2300424
கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகம்: 0422-2214225
அன்னூர்: 04254-262260
மேட்டுப்பாளையம்: 04254-222153
கோவை தெற்கு: 0422-2247831
சூலூர்: 0422-2681000
பேரூர்: 0422-2606030
மதுக்கரை: 0422-2622338
பொள்ளாச்சி: 04259-226625
கிணத்துக்கடவு: 04259-241000
ஆனைமலை: 04253-222305
வால்பாறை: 04253-281100
மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு மழை மற்றும் இயற்கை இடர்ப்பாடுகள் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் – மாவட்ட நிர்வாகம்
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும், அதே நேரத்தில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மிக கனமழை காரணமாக மலைப்பாதைகளில் நிலச்சரிவு, மரங்கள் விழுதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற அபாயங்கள் நிலவும் நிலையில், நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்கான இரவு நேர வாகனப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குப் பயன்படும். குறிப்பாக ஊட்டி, வால்பாறை செல்லத் திட்டமிடுபவர்களுக்கு இந்த அறிவிப்பை உடனடியாகப் பகிருங்கள். உங்கள் ஒரு பகிர்வு, மற்றொருவரின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவலாம்!






