கோவை: கோவையில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு போலி பேஸ்புக் கணக்கில், அந்த இளம் பெண் அவரது தாயும் இருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், தனிமையில் பேச அழைக்கலாம் என்று குறிப்பிட்டு, அந்த பெண்ணின் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் தினமும் யார் யாரோ அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் விசாரித்தபோது, ஒரு பேஸ்புக் ஐடியில் அவரைப் பற்றி யாரோ ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டதை அறிந்தார்.

இது குறித்து இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், போலி பேஸ்புக் ஐடி உருவாக்கி ஆபாசமாக பதிவிட்டது பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டியை சேர்ந்த வசந்தராஜ் (36) என்பது தெரியவந்தது.
போலீசார் நேற்று அவரைக் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

