கோவை: சமூக வலைதளங்களில் இந்து மதக் கடவுள்கள், மத நம்பிக்கைகள், கோயில்கள் மற்றும் இந்து முன்னணி இயக்கம் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோவையைச் சேர்ந்த 26 வயது வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து முன்னணி சார்பில் கடந்த அக். 22ஆம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், சமூக வலைதளங்களில் மர்ம நபர் ஒருவர் இந்து மதக் கடவுள்கள், இந்துக்களின் மத நம்பிக்கைகள், கோயில்கள் மற்றும் இந்து முன்னணி இயக்கம் குறித்து இழிவான மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதுபோன்ற பதிவுகளால் மத உணர்வுகள் புண்படுவதுடன், சமூகத்தில் மத நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் காணொளிகளை ஆய்வு செய்து, அவற்றைப் பதிவிட்ட நபர்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா கோயில் வீதியைச் சேர்ந்த ஜெரோம் பெஹ்ருன் (26) என்பவர் இந்தப் பதிவுகளை வெளியிட்டதாகக் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராமநாதபுரம் போலீசார் ஜெரோம் பெஹ்ருன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளங்களில் மதம் தொடர்பான கருத்துகளைப் பதிவிடுவது குறித்து புகார் எழுந்த நிலையில், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A 26-year-old man was arrested in Coimbatore following a complaint alleging offensive social media posts about Hindu religion, temples and beliefs.






