கோவை: யூடியூபர் முக்தார் அகமது மீது கோவையில் காமராஜர் பாசறையினர் புகார் மனு அளித்தனர்.
கோவை ரத்தினபுரி தில்லை நகர், காமராஜர் பாசறை தலைவர் பழனிவேல் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 30ம் தேதி யூடியூப் சேனலில் முக்தார் அகமது என்பவர் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார்.


அன்று கிறிஸ்துவ மத போதகர் காட்பிரே நோபல் என்பவரிடம் முக்தார் அகமது நேர்காணல் எடுத்துள்ளார். அப்போது காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான் ஊழலே ஆரம்பமானது என்றும், காமராஜர் ஆட்சி காலத்தில் தான் சிவகாசியில் கள்ள நோட்டுகள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் இருந்தது என்றும் மற்றும் சாதி ரீதியாக இழிவு படுத்தி பேசியுள்ளார்.
அதிகமான பார்வையாளர்கள் தன்னுடைய யூடியூப் சேனல் பார்த்து தனக்கு அதிக வருமானம் வர வேண்டும் என்ற உள் நோக்கத்தில் திட்டமிட்டு முக்தார் அகமது இழிவாக பேசி உள்ளார்.
காமராஜர் பற்றி இழிவாக பேசிய யூடியூப்பில் உள்ள வீடியோக்கள் நீக்க வேண்டும். மேலும் மை இந்தியா யூடியூப் சேனல், பேஸ் புக் பக்கத்தை தடை செய்ய வேண்டும். மேலும் முக்தார் அகமது மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
அவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



