கோவை: மும்பையில் இருந்து கோவைக்கு கடத்தி வந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஆறு பேரை கைது செய்த காவல் துறையினர் 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரை, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை, குனியமுத்தூர் இருந்து பேரூர் செல்லும் சாலையில் சிலர் போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே குனியமுத்தூர் ஆய்வாளர் நெப்போலியன் தலைமையில் காவல் துறையினர் விரைந்து சென்று அங்கு உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று ஆறு பேரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்குப் , பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் குனியமுத்துரைச் சேர்ந்த பியாசாலி, அப்துல் ரகுமான், சரண்ராஜ், கவிநிலவன், நவுபல் , சர்பிக் அலி என்பதும், அவர்கள் போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கோவைக்கு ரயிலில் கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
உடனே அவர்கள் ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,200 போதை மாத்திரைகள், 6 செல்போன்கள், 700 கிராம் உயர்ரக கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து காவல் துறையினர் அந்த ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும் போது, கைதான பியாசாலி, சரண்ராஜ், நவ்பல் சர்பிக் அலி ஆகியோர் மீது போதை மாத்திரை உயர் ரக கஞ்சா விற்றதாக ஏற்கனவே வழக்குகள் உள்ளன. அவர்கள் கர்நாடகா மற்றும் மும்பைக்கு ரயிலில் சென்று போதைக்கு பயன்படுத்துவதற்காக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து உள்ளனர்.
ஒரு மாத்திரை ரூபாய் 30 ரூபாய்க்கு வாங்கி ரூபாய் 450 வரை விற்று உள்ளனர். இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தகவல் தெரிவித்துள்ளனர்.