கோவையில் மனைவியை கொல்ல திட்டம்; நாடகமாடிய அதிமுக மாஜி கவுன்சிலர்!

கோவை: மனைவியை ஓட்டுநரை வைத்து கொலை செய்த அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கவி சரவணகுமார்.

இவரது மனைவி மகேஸ்வரி(46). இந்த தம்பதிக்கு கல்லூரி படிக்கும் மகனும், பள்ளியில் படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கவி சரவணகுமார் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று காலை 10 மணி அளவில் கவி சரவணக்குமாரின் வீட்டிற்கு சென்ற சுரேஷ், தனது முதலாளியின் மனைவியை கொலை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், மகேஸ்வரியை கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாக கூறி போலீசில் சரணடைந்தார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்த போது, முதலாளிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட நான் தான் காரணம் என்று மகேஸ்வரி கூறியதால் அவரை கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறினார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தன்னை கொலை செய்யச் சொன்னதே முதலாளி கவி சரவணக்குமார் தான் என்று சுரேஷ் கூறியுள்ளார்.

கவி சரவணன் அவரது மனைவி மகேஸ்வரி விவாகரத்து தர மறுத்ததால் கொன்றுவிடுமாறும் மேல் கொண்டுவரும் வழக்கு செலவையும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேம்பரையும் தருவதாக ஆசை வார்த்தை கூறியதால் கொலை செய்ததாக சுரேஷ் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தடாகம் காவல்துறையினர் கவி சரவணக்குமாரையும் கைது செய்து இந்த வழக்கில் இரண்டாவது கொலை குற்றவாளியாக சேர்த்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதிமுக பிரமுகர் ஒருவர் மனைவியை டிரைவரை வைத்து கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

Video

Join WhatsApp