கோவை: பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து மாணவிகள் வீடியோ வெளியாகிய நிலையில், அந்த வீடியோவை எடுத்த பெண் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
பொள்ளாச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மாணவிகள் மூவர் பேசும் வீடியோ வெளியாகிறது.
நேற்றைய தினம் இது தொடர்பாக காவல் துறையினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த வீடியோவை எடுத்த பெண்ணை போத்தனூர் காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதனிடையே அவர் விசாரணைக்காக ஆஜரானார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அந்த பெண்,
“எவ்வித உள் நோக்கமும் இல்லாமல், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே வீடியோ எடுத்தேன். இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வீடியோவை வெளியிட்டேன்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அரசியல் ரீதியிலான ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
இனி அந்த பள்ளியில் பெண் குழந்தைகள் மீது தவறான கண்ணோட்டத்தில் யாரும் நடந்து கொள்ள மாட்டார்கள். இந்த சம்பவம் எதுவாயினும் தனது நோக்கம் வெற்றி அடைந்துள்ளேன்.
முதலில் நான் வீடியோ எடுத்தேன், ஆனால் நான் எடுத்தால் ஏற்கனவே பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தனக்கும் உள்ள விரோதம் காரணமாக எடுத்ததாக திசை திருப்புவார்கள் என்பதால் வேறு ஒரு நபரை வைத்து வீடியோ எடுத்தேன்.” என்றார்