கோவை: கரூர் சம்பவத்தில் தவெக கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதத்தை தன்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று சிபிஎம் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் மேற்கு வங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (CPIM) பிருந்தா காரத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பழனியில் நடைபெறும் மலைவாழ் மக்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதாக கூறினார்.
கரூரில் தமிழக வெற்றி கழகம் பிரச்சாரத்தின் பொழுது உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இரு தினங்களுக்கு முன்பு ஜென்ரல் செகரட்டரி கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்ததாகவும் விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.
தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் கூட்டங்கள் போன்றவை நடைபெறும் பொழுது அது அதன் ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என்றும் உத்திரபிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் என்றார். மேலும் பொது நிகழ்ச்சிகளில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறினார்.
CPIM சார்பிலும் கரூர் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார். தமிழக முதல்வர் தாமதப்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்தார், ஆனால் சம்பந்தப்பட்ட அந்த அரசியல் கட்சித் தலைவர் அங்கிருந்து கிளம்பி உள்ளார் என குறிப்பிட்டார். இதனை நீதிமன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது என்றார்.
40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் பொழுது அந்த தலைவர் அங்கிருந்து சென்றுள்ளார் அதனை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.