கோவை: கோவையில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகளில் கேபிள்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் இணைய சேவை, கேபிள் இணைப்பு, டெலிபோன் இணைப்பு ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவை பெரும்பாலும் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள் வழியாக ஆக்கிரமித்தே கேபிள் வயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இது சில நேரங்களில் வாகன விபத்துக்கும் வழிவகுக்கிறது. ஊழியர்கள் அவசரகோலத்தில் மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவற்றின் மீது கட்டி கேபிள் வயர்களை இழுத்துச் செல்கின்றனர். இவற்றை முறையாகப் பராமரிக்காமல் பண்டலாகக் கட்டி சாலையோரத்தில் போட்டுவிடுகின்றனர்.
இதையும் படிக்கலாம்: மருதமலை உண்டியலில் குவிந்த தங்கம், வெள்ளி!
இதில் தடுக்கி வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடையும் நிலை தொடர்கிறது. இதேபோல், சமீபத்தில் ராமநாதபுரம் மேம்பாலத்தில் பைக்கில் சென்ற ஒருவர் சாலையோரம் சிதறிக் கிடந்த கேபிள் வயரில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தார்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
மாநகரில் உள்ள பாலங்கள், சாலைகளில் கேபிள் வயர்கள் இதேபோல் சுருண்டு கிடக்கின்றன. மேலும் சில இடங்களில் கேபிள் வயர்கள் காற்றில் அசைந்து, 6 அடி உயரத்துக்கும் கீழாகவே தொங்குகின்றன.
இதனால் பைக்கில் செல்பவர்களின் கழுத்துக்கும் உத்தரவாதம் இல்லை. கேபிளில் சிக்கி விழுந்து படுகாயமடையும் சம்பவங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக அவிநாசி ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இதே நிலைதான் நீடிக்கிறது.
எனவே நகரில் இணைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்களை முறையாகப் பராமரித்து ஒழுங்குபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

