கோவை: மலுமிச்சம்பட்டி உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் மைதானம் அமைக்கும் பணியை நிறுத்தி கூடுதலாக பள்ளி மாணவர்களுக்கு கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை ஜே.ஜே நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அந்தப் பள்ளியில் படித்து வரும் நிலையில் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி தமிழக அரசுக்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஊராட்சிக்கு சொந்தமான 3.92 ஏக்கர் நிலத்தை மேல்நிலைப் பள்ளியாக மேம்படுத்தற்கு அரசுக்கு அப்பகுதி மக்கள் சார்பாக 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்ட நிலையில் தற்போது விளையாட்டுத் துறை சார்பாக பள்ளி கட்டுவதற்கு தடை விதித்து மைதானத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பகுதி சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பேருந்து ஏறி மலுமிச்சம்பட்டி, செட்டிபாளையம்,வெள்ளலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று படித்து வருவதாகவும்,பெண் குழந்தைகள் மிகவும் அவதி அடைந்த வருவதாகவும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மைதானம் அமைக்கும் இடத்தை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.