கோவை: கோவையில் பெய்து வரும் மழையின் காரணமாக எம்ஜிஆர் மார்க்கெட் சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது…
கோவை மாவட்டத்தில் பிரதான காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெட் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு கோவை நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டுவரப்படுகின்றன.
இங்கு மழைக்கான தடுப்பு சீட்கள் எதுவும் இல்லாததால் மழை பெய்யும் பொழுதெல்லாம் மழை தேங்கும் சூழல் உண்டாகிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகளும், தொழிலாளிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சேற்றில் கால்கள் புதையும் அளவிற்கு சேறும் சகதியுமாய் இருப்பதால் தொழிலாளிகள் பலருக்கும் கால்களில் சேற்று புண் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி காய்கறிகள் இறக்க வரும் வாகனங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களும் சில சமயங்களில் சேற்றில் மாட்டி கொள்கிறது.
இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் தற்காலிகமாக தேங்கியுள்ள மழைநீர் வடிந்து செல்வதற்கு மட்டும் பணிகளை மேற்கொள்வதாகவும், நிரந்த தீர்வு காணப்படுவதில்லை என கூறினர். எனவே இங்கு மழை நீர் தேங்காத வண்ணம் நிரந்த தீர்வு காணவேண்டும் என வியாபாரிகளும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோன்று குடிநீர் வசதிகள் சுகாதாரமான கழிப்பட வசதி ஆகியவற்றையும் செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தற்போது இங்குள்ள வியாபாரிகளை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றி இந்த இடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.