கோவை: தரமான தார் சாலை அமைத்து தர வலியுறுத்தி சிபிஐஎம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டத்திலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி ஒண்டிப்புதூர்- இருகூர் செல்லும் சுமார் 3 கிமீ சாலை மோசமாக உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தரமான தார் சாலை அமைத்து தர வேண்டி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவ்வப்போது பேட்ச் ஒர்க் மட்டுமே செய்யப்பட்டு வருவதால் பெரிதளவு பயனில்லாமல் சாலை மீண்டும் மீண்டும் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. மழைக்காலங்களில் அதிகளவிலான விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் சிபிஐஎம் கட்சியினருடன் இணைந்து கடை அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதிக்கு தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அனுமதியை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

