கோவை: கோவை மாநகரில் குப்பைகளை ரோட்டில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகம் அனுப்புகிறது.
கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை ஆர்.எஸ் புரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கின்றனர்.
திறந்தவெளி குப்பை கொட்டுவோர் யார் ? எந்தெந்த பகுதியில் இருந்து வருகின்றனர். அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் செல்வதில்லையா ? தொழிலாளர்கள் சென்றாலும் சாலையில் வந்து குப்பையை போடுவது ஏன் ? என கண்காணித்து ஆய்வு நடத்துகின்றனர்.
பின் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அதே தவறை செய்வதால், அபராதம் விதிக்கப்படும் என்கின்ற எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
வ.உ.சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள வணிக வளாக கடைகள் சிலவற்றில் சேகாரமாகும் குப்பையை ஓரிடத்தில் சேகரித்து வைக்காததால் பரவி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தினருக்கு மாநகராட்சி சார்பில் வழங்கிய நோட்டீஸில் உங்கள் வணிக நிறுவனத்தின் முன் இரவு நேரங்களில் குப்பையை பெருக்கி வெளியே சிதறி கிடப்பதற்கு புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரம் இருக்கிறது.
அவற்றை அகற்றி ஒரு பையில் சேகரித்து உங்கள் வளாகத்தில் முன் ஓரத்தில் வைக்க வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் முதல் முறை என்றால் ரூபாய் 500, இரண்டாவது முறை என்றால் ரூபாய் 1500, மூன்றாவது முறை என்றால் ரூபாய் 5,000 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

