கோவை: ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது
நாளைய தினம் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவையில் உள்ள மலையாள மக்கள் உட்பட பலரும் கேரளா செல்வதற்காகவும் பொள்ளாச்சி பழனி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காகவும் உக்கடம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளா செல்லும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பேருந்துகளில் ஏறி சென்றனர். சிலர் முந்தி அடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறினர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை சீர்படுத்தி பேருந்துகளில் ஏறுவதற்கு வழிவகை செய்தனர்.
மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் உடமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படியும் தொடர்ந்து அறிவுறுத்தினர். அதேபோன்று காந்திபுரம் சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கேரளா மட்டுமல்லாமல் பொள்ளாச்சி பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் அதிகப்படியான மக்கள் உக்கடம் பேருந்து நிலையத்தில் திரண்டனர். இதனால் இப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் உடன் காணப்பட்டது.