கோவையில் மோடியின் பயணம் என்ன? போலீஸ் பாதுகாப்பு என்ன?

கோவை: கோவைக்கு நாளை பிரதமர் வருகையையொட்டி கோவையில் இன்று நகரில் பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது. 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நாளை முதல் 21-ம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில் இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து பேசுகிறார்.

சிறப்பாக செயல்பட்ட 10 விவசாயிகளுக்கு விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் இயற்கை விவசாயிகள், இளம் விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மதியம் 12.30 மணிக்கு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 1.25 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். மதியம் 1.30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கம் செல்கிறார்.

அங்கு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார். பின்னர் விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடியின் கோவை வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மக்கள் கூடும் இடங்களான தேவாலயங்கள், மசூதி, வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவை விமான நிலைய பகுதி, சிங்காநல்லூர், எஸ்ஐஎச்எஸ் காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சித்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம் மற்றும் ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகள் தற்காலிகமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் நாளை இரவு 7 மணி வரை மாநகரில் 48 மணி நேரத்திற்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

பிரதமர் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர், வெளி மாநில நபர்களின் வருகை கண்காணிக்கப்படும். தங்கும் விடுதிகளில் நபர்களை அனுமதிக்க பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாநகரில் விமான நிலைய பகுதி, கொடிசியா, பிரதமர் கான்வாய் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. மாநகரில் ஏற்கனவே உள்ள சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி கூடுதலாக செக்போஸ்ட் போடப்பட்டுள்ளது. மொத்தம் 40 இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே மாநகருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவை நகரில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள், வெளியூர், மாநிலங்களில் இருந்து கோவைக்கு நுழையும் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோனை கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் கோவை ஏர்போர்ட்டில் இருந்து பிரதமர் கொடிசியா அரங்கம் செல்லும் சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நடக்க உள்ளது. இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent News

Video

Join WhatsApp