கோவை: பெரியார் அறிவுலக நூலகத்தில் சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விவகாரம் தொடர்பாக முற்போக்கு இயக்கங்கள், கலை இலக்கிய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை காந்திபுரம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் உள்ள நூலகத்தில் இடம்பெற்றுள்ள சில புத்தகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட பதிப்பகங்களின் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்தப் புத்தகங்கள் போலியானவை என்றும், அவற்றில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் நம்பகத்தன்மையற்றவை என்றும் பல்வேறு எழுத்தாளர்கள் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், அந்தப் புத்தகங்களை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பதிப்பகங்களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்து கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கலை இலக்கிய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண்டனப் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். சர்ச்சைக்குரிய புத்தகங்களை உடனடியாக நூலகத்திலிருந்து அகற்ற வேண்டும், சம்பந்தப்பட்ட பதிப்பகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.






