தொண்டாமுத்தூர் தான் டார்கெட்… கோவை திமுக.,வினருக்கு செந்தில்பாலாஜி எச்சரிக்கை…!

கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியை கைப்பற்ற வேண்டும், வேலை செய்யவில்லை என்றால் கீழே அமர வேண்டிய நிலை வரும் என்று செந்தில் பாலாஜி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி, உட்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நம்முடைய தலைவர் முதல்வர் தான் வேட்பாளர் என நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும். அனைவரும் உங்கள் வாக்குச்சாவடியில் கடந்த முறை பெற்ற வாக்குகளை காட்டிலும் அதிக வாக்குகள் பெறுவதற்கு செயல்பட வேண்டும்.

ஒவ்வொருவரும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து நமது திட்டங்களை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் சென்று நமது திட்டங்களை எடுத்துக் கூறி அவர்களை மன மாற்றம் செய்து நமக்கு வாக்காளர்களாக மாற்றினால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் வெற்றி பெறும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட நாம் வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னைக்கு அடுத்தபடியாக முதல்வர் அதிகமாக வருகை புரிந்தது கோவை மாவட்டத்திற்கு தான். அதிக திட்டங்களை கொடுத்ததும் கோவை மாவட்டத்திற்கு தான்.

முதல்வருக்கு நாம் செலுத்துகின்ற நன்றி கடன் கோவையில் 10 தொகுதிகளிலும் வென்றோம் அதிலும் தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றோம் என்ற சரித்திர சாதனையை உருவாக்கும் வகையில் அனைவரும் பணியாற்றிட வேண்டும்.

மேலும் மேடையில் உள்ள நிர்வாகிகள் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் கீழேதான் அமர வேண்டும், அது நானாக இருந்தாலும் சரி, கீழே இருப்பவர்கள் நன்கு வேலை செய்தால் அவர்கள் மேடைக்கு வரலாம். கட்சி நிகழ்ச்சி என்று வந்துவிட்டால் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒன்றிணைந்து பணி புரிய வேண்டும். இதனை வேண்டுகோளாகவும் வைக்கிறேன். எச்சரிக்கையாகவும் கூறுகிறேன்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து உங்கள் பகுதியில் எத்தனை வாக்குகள் பெறுகிறீர்களோ அதற்கு தகுந்தார் போல் பரிசுகள் உண்டு. பூத் கமிட்டி நிர்வாகிகள் சரியாக பணி செய்தால் தொண்டாமுத்தூரில் உதயசூரியன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்ற நிலையை உருவாக்க முடியும்.

தலைவர் அறிவிக்கும் வேட்பாளரை தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற செய்வோம். என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் தொகுதிகள் வாரியாக இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கு தந்திருக்கக் கூடிய திட்டங்களையும் வீடுகள் வாரியாக சென்று வாக்காளர்களை சந்தித்து எடுத்துரைக்க உள்ளோம். வெல்லும் தமிழ் பெண்கள் மகளிர் அணியை சார்ந்திருக்க கூடிய கழக நிர்வாகிகள் வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்க கூடிய முதல்வரின் வழிகாட்டுதலின்படி முன்னெடுத்துள்ளோம்.

கோவையை பொருத்தவரை அதிமுக ஆட்சியில் போடப்படாத சாலைகளுக்காக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி முதல்வரால் வழங்கப்பட்ட சாலைகள் போடப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி கூடுதலாக 125 கோடி ரூபாய் நிதி தரப்பட்டு சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜய்க்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செங்கோட்டையன் பேசியது குறித்தான கேள்விக்கு, “தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்களை பற்றி ஏன் கேள்வி கேட்கிறீர்கள். தொடர்பு எல்லைக்கு உள்ளே இருப்பவர்களைப் பற்றியும் அரசியல் களத்தில் மக்களை சந்திப்பவர்களைப் பற்றியும் கேள்வி கேளுங்கள். மக்களோடு இணைந்து பணியாற்றக்கூடியவர்களை பற்றி கேள்வி கேளுங்கள்.” என்றார்

பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அமைய வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தது குறித்தான கேள்விக்கு, “அவர் முதலில் மணிப்பூர் சென்றாரா இல்லையா? தமிழகத்திற்கு பாதுகாப்பான அரசு உள்ளது. அரசு எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று மகளிர்க்கு தெரியும். அனைத்திலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. அதெல்லாம் வானதிக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

கோவையில் எஸ்பி வேலுமணியா செந்தில்பாலாஜியா என்ற கேள்விக்கு, “யாரும் யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. கோவையில் ஒரு எஸ்.பி.வேலுமணி போனால், இன்னொரு எஸ்.பி.வேலுமணி வருவார். அதே போல் திமுக.,வில் ஒரு தொண்டாமுத்தூர் ரவி சென்றால், இன்னொரு தொண்டாமுத்தூர் ரவி வருவார். எங்களைப் பொருத்தவரை ஓரணியில் தமிழ்நாடு என்பதில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp