கோவை: கோவையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி துவங்கப்பட்டது.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சேலம் கைத்தறி நெசவாளர் சேவை மையத்தின் சார்பில் கோவை அவிநாசி சாலையில் உள்ள ராமலக்ஷ்மி மஹாலில் ‘தி கிராண்ட் இந்தியன் தசரா தீபாவளி கைத்தறி மகோத்சவம்’ எனும் சிறப்பு கைத்தறி கண்காட்சி இன்று (13.10.2026) முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் காஞ்சிபுரம் பட்டு புடவைகள், போச்சம்பள்ளி புடவைகள், பெங்கால் காட்டன், பட்டோலா, பைத்தானி உள்ளிட்ட பல்வேறு வகை கைத்தறி துணி ரகங்கள் விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. சுமார் 50க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் நிறுவனத்தினர் அரங்குகள் அமைத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இக்கண்காட்சியில் சிறப்பு தள்ளுபடி விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கண்காட்சியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், கைத்தறி நெசவுத் தொழிலில் சிறந்த பங்களிப்பு செலுத்திய நெசவாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் மத்திய மாநில அரசுகளின் மானியத்தின் கீழ் கைத்தறி நெசவு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் விஜய பாலாஜி, கடந்த காலங்களில் கைத்தறி நெசவுத் தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்ததாகவும், தவெக ஆட்சியில் கைத்தறி நெசவு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கைத்தறி துறையை மேம்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜய பாலாஜி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி சேலை திட்டத்திற்கான உற்பத்திகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், தரமான வேட்டி சேலைகள் இந்த பொங்கலுக்கு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனக் கூறினார். மேலும் மேட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு பூங்கா அமைப்பதற்கான கோரிக்கை வரப்பெற்றதைஅடுத்து பூங்கா அமைப்பதற்கான இடத்தினை ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என தெரிவித்தார்.
நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.






