கோவை:கோவையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கவும் வலியுறுத்தி மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
கோவையில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் பங்கேற்று, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை செஞ்சிலுவைச் சங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுமதி, பொருளாளர் சண்முகம், மாவட்டத் தலைவர் கோபால், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலத் தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவையைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை வன்கொடுமைக்கு உட்படுத்தி, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 40 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பழனியைச் சேர்ந்த கார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பொருளாதார மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு விரைவாக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.






