கோவை: தூய்மை மிஷன் 2.0 திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.
தூய்மை மிஷன் 2.0 கலெக்டிவ் டிரைவ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பயன்படுத்தாத காகிதங்கள், நாற்காலிகள், மேசைகள் மின்சாதன பொருட்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி அலுவலகங்கள் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தி வருகின்றனர். அப்புறப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பல்வேறு துறை அலுவலகங்களுக்கு சென்ற அவர் அங்கு பயன்படுத்தாத காகிதங்கள், நாற்காலிகள், மேசைகள், மின் சாதன பொருட்களை அப்புறப்படுத்த துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.