கோவை: செல்வபுரத்தில் அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூரில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலில் பூசாரி வழக்கம் பூஜை செய்துவிட்டு, கோவிலைப் பூட்டிவிட்டு சென்றார்.
மறுநாள் காலை சென்றபோது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு சேதம் அடைந்திருந்தது. ஆனால் பணம் கொள்ளை போகவில்லை.
இது குறித்து கோவில் நிர்வாகி செந்தில் குமார் என்பவர் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நள்ளிரவில் கோவில் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து, உண்டியலில் பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
ஆனால் முடியாததால் முயற்சியை பாதையில் கைவிட்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், செல்வபுரம் அரச மர பஸ் ஸ்டாப் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி கதிர்வேல் என்பவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
செல்வபுரம் சுற்றுவட்டாரத்தில் கோவில்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக கொள்ளை முயற்சி நடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.