கோவை: பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதிகளே இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்வை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா துவக்கி வைத்து முதலில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி தேவகிக்கு 48 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் காசோலையை வழங்கினார்.

அதனை பெற்றுக் கொண்ட தேவகி கண்ணீர் மல்க நீதியரசருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் சமரச தீவு காணப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய நீதியரசர் எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் சமாதானம் என்பதை தான் வலியுறுத்துவதாக தெரிவித்தார். லோக் அதாலத் அறிமுகமாகும் பொழுது பலரும் எதிர்ப்பாக இருந்ததாகவும் நாட்கள் செல்ல செல்ல அதில் பல்வேறு நல்ல விஷயங்களை இருந்ததால் அதனை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டார்.
இதன் மூலம் பல்வேறு வழக்குகள் சீக்கிரமாக முடிவதாகவும் இந்த தீர்வு காணப்பட்டால் Court Fee திருப்பி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் 2563 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது நல்ல விஷயம் என்றும் அதில் மக்களுடைய ஒத்துழைப்பும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம் என தெரிவித்தார்.
மேலும் இன்சூரன்ஸ் கம்பெனியினர் வழக்குகளை சீக்கிரமாக முடிக்க பாருங்கள், அதேபோன்று போக்குவரத்து துறை, நிலம் சார்ந்த துறை ஆகிய வழக்கிலும் வழக்குகளை சீக்கிரமாக முடிக்க வேண்டுமென கூறினார்.
பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதிகள் இல்லை என தெரிவித்த அவர் நீதிபதிகளை நியமிக்க முடியாத சூழலில் இருக்கிறோம் அவ்வாறு இருக்கும் பொழுது அரசு அதிகாரிகளும் தங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினால் தான் வழக்குகளை சீக்கிரமாக முடிக்க முடியும் என தெரிவித்தார்.