கோவை: சிங்காநல்லூரில் அடிப்படை வசதிப் பணிகளை விரைந்து மேற்கொள்ளக் முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் மனு அளித்து ஒப்பந்தப் பணிகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தெருவிளக்குகள், பூங்கா பராமரிப்பு, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, திமுக மாநில தீர்மானக்குழுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா. கார்த்திக், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜாவிடம் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர், கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மனுவில், ஏற்கெனவே நிர்வாக அனுமதி பெறப்பட்டு, ஒப்பந்தப் பணிகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட நா. கார்த்திக், அவற்றை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகத் திட்டமிடப்பட்ட பல்வேறு பணிகளின் மதிப்பீடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் சில அடிப்படை வசதிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிலுவையில் உள்ள பணிகளை ஆய்வு செய்து, அவற்றை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கோவை மாநகராட்சியில் ஒரு சில ஒப்பந்ததாரர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறிய நா. கார்த்திக், இதுதொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்தப் பணிகள் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சிங்காநல்லூர் தொகுதியில் சாலைப் பள்ளங்கள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் இருப்பதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மக்களைச் சந்திப்பது தொடர்பாகவும் அவர் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தொகுதியில் மதுபான விற்பனை தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, உண்மை நிலையை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நா. கார்த்திக் வலியுறுத்தினார்.






